செய்திகள்
மூதாட்டியை சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற காட்சி.

‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் - பொதுமக்கள் பாராட்டு

Published On 2018-11-01 03:55 GMT   |   Update On 2018-11-01 03:55 GMT
பட்டுக்கோட்டை அருகே ‘நண்பன்’ பட பாணியில் மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். #OldWoman #Youngsters
பட்டுக்கோட்டை:

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த ‘நண்பன்“ என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் உயிருக்கு போராடும் ஜீவாவின் தந்தையை விஜய் ஸ்கூட்டரில் உட்கார வைத்து போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல ஒரு காட்சி இருக்கும்.

இந்த காட்சியை நினைவுபடுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கோவில் குளத்தில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் மீட்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசிவிசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு (வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார்.

படிக்கட்டுகள் வழியாக குளத்திற்குள் இறங்கி அங்குள்ள படிக்கட்டில் நின்று கொண்டு அந்த மூதாட்டி கை, கால்களை கழுவிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார்.

நீண்ட நேரம் குப்புற கிடந்த அந்த மூதாட்டியை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர். உடனடியாக அவர்கள் குளத்திற்குள் இறங்கி அவரை மீட்டு வந்து குளத்தின் கரையில் போட்டனர். அவர் இறந்து விட்டார் என்று திகைத்து நின்றபோது மூதாட்டியின் உடலில் லேசான அசைவு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(வயது 23), ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்த ஆட்டோவை அழைத்தனர். ஆனால் யாரும் அந்த மூதாட்டியை ஏற்றிச்செல்ல வரவில்லை.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருவரும் ஒரு கணம் திகைத்தனர். ஆனால் மறுகணமே சுதாரித்துக்கொண்ட அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். இதனையடுத்து அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, மற்றொருவர் அந்த மூதாட்டியை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.

உடனே மோட்டார் சைக்கிளை இயக்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் அந்த மூதாட்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சரியான நேரத்தில் சேர்த்ததால் அந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த மூதாட்டி தற்போது நலமுடன் உள்ளார்.

உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றதால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்கு காரணமாக இருந்த அந்த இளைஞர்கள் இருவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.  #OldWoman #Youngsters
Tags:    

Similar News