செய்திகள்

ஆத்தூரில் தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடிய சிறுவன் பலி

Published On 2018-10-14 09:42 GMT   |   Update On 2018-10-14 09:42 GMT
ஆத்தூரில் இன்று தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடிய சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆறுமுகநேரி:

மகா புஷ்கர விழாவை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பாதுகாப்பு கருதி சில படித்துறைகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நீராட அனுமதி வழங்கப்படாத படித்துறையில் குளித்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.

இன்று நடந்த அந்த பரிதாப சம்பவம் பற்றி விபரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ரெங்கநாதன் தனது மனைவி பிச்சம்மாள் மற்றும் 2 மகன்களுடன் சுவாமி தரிசனம் செய்ய திருச்செந்தூருக்கு பஸ்சில் வந்தார். அந்த பஸ் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு வந்தபோது புஷ்கர விழா நடப்பதால் தாமிரபரணி ஆற்றில் குளிக்க ரெங்கநாதன் முடிவு செய்தார்.

அதன்படி ஆத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது மனைவி மற்றும் மகன்களுடன் அரசமரத்தடி படித்துறைக்கு சென்றார். அங்கு ஆற்றில் இறங்கி 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவரது மூத்த மகனான அமுத சுகந்தன் (வயது 11) திடீரென தண்ணீரில் மூழ்கினான்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்த சிறுவனை மீட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவனை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீசார் சிறுவன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாமிரபரணியில் புனித நீராடிய சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News