செய்திகள்

மதுரை அருகே கண்மாய் உடைந்ததால் 150 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

Published On 2018-10-09 11:19 IST   |   Update On 2018-10-09 11:33:00 IST
மதுரை அருகே கண்மாய் உடைந்ததால் ஆனையூர், கூடல்புதூர் பகுதிகளில் 150 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. #Rain

மதுரை:

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கண்மாய்கள் முறையாக தூர்வாறி ஆழப்படுத்தப்படாததால் தண்ணீர் வீணாகி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி உள்ளது.

கூடல்புதூர், ஆனையூர் பகுதிகளில் உள்ள சிலையனேரி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகள் காரணமாக நேற்று இரவு திடீர் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் கூடல் புதூர், ஆனையூர் பகுதிகளில் உள்ள 150 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்த பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய்களை ஆழப்படுத்தி இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது.

அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் இன்று மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்களை சீர் செய்ய வேண்டும். கண்மாய்களையும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றவும் உடனடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain

Tags:    

Similar News