செய்திகள்

ரூ.41 லட்சம் குட்கா பறிமுதல்: கைதான 3 பேர் ஜெயிலில் அடைப்பு- முக்கிய குற்றவாளி தலைமறைவு

Published On 2018-10-06 16:34 IST   |   Update On 2018-10-06 16:34:00 IST
நாகர்கோவில் கோட்டார் சரக்கல்விளை பகுதியில் ரூ.41 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். #Gutka #tamilnadu
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் சரக்கல்விளை பகுதியில் ஒரு வீட்டில் குட்கா புகையிலை பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அங்கு லாரியில் கொண்டுவரப்பட்ட குட்கா புகையிலையையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.41 லட்சம் ஆகும்.

குட்கா பொருட்களை கொண்டு வந்த லாரி டிரைவர் மேட்டூரை சேர்ந்த சுதாகர் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கோட்டார் வாகையடி தெருவைச்சேர்ந்த கணேஷ், முதலியார்விளையை சேர்ந்த ஹரிகரசுதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் புத்தேரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ரமேஷ் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். போலீசார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

அவரை கைது செய்தால் தான் குட்கா புகையிலை கடத்தி வந்ததில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற விவரம் தெரியவரும். எனவே ரமேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சுதாகர், கணேஷ், ஹரிகரசுதன் ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

குட்கா புகையிலை பொருட்கள் நாகர்கோவிலில் மேலும் ஒருசில இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #Gutka #tamilnadu
Tags:    

Similar News