செய்திகள்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு: 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-10-05 09:14 GMT   |   Update On 2018-10-05 09:14 GMT
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராக வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
மதுரை:

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த அருள்நிதி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை திருப்பரங்குன்றம், அனுப்பானடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்று விட்டது. தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

எனவே நீர் நிலைகளில் தண்ணீரை தேக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த வழக்கில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுக்களை அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்த குழுவில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள்.

இந்த குழுவானது மதுரை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைக்க உத்தரவிடப்படுகிறது.

குழுவினர் நீர்நிலைகளில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்கள். இது தொடர்பாக விளக்கம் அளிக்க 5 மாவட்ட கலெக்டர்கள் வருகிற 11-ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.  #MaduraiHC
Tags:    

Similar News