செய்திகள்

கடன் பாக்கி பணத்துக்காக 2 மாத குழந்தை, பாட்டியை கடத்தி சிறைவைப்பு- கந்து வட்டிக்காரர் கைது

Published On 2018-10-03 07:34 GMT   |   Update On 2018-10-03 07:34 GMT
திருவண்ணாமலையில் வட்டி பணத்திற்காக 2 மாத குழந்தை, மூதாட்டியை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #usury #tamilnadu
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி பாரதி (வயது 22). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(31) என்பவரிடம் ரூ.3 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார்.

இந்த பணத்திற்கு பாரதி 10 நாட்களுக்கு ஒரு முறை ரூ.300 வட்டியாக மணிகண்டனிடம் செலுத்தி வந்து உள்ளார். இதற்கிடையில் பாரதியின் தாயார் கண்ணாத்தாள் மணிகண்டனிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.

இவர்கள் இருவரும் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் மணிகண்டனிடம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் மணிகண்டன், பாரதி மற்றும் அவரது தாயாரிடம் ரூ.80 ஆயிரம் நீங்கள் தர வேண்டியது உள்ளது. அதனை உடனே வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன், பாரதியின் வீட்டிற்கு வந்து அவரது 2 மாத பெண் குழந்தையையும், பாரதியின் பாட்டி குப்புவையும் கடத்தி சென்றார். 2 பேரையும் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் சிறை வைத்திருந்தார்.

இது குறித்து பாரதி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் மணிகண்டனின் வீட்டிற்கு விரைந்து சென்று அங்கு கடத்தி சிறை வைக்கப்பட்டிருந்த 2 மாத குழந்தையையும், மூதாட்டி குப்புவையும் மீட்டனர். குழந்தையை பாரதியிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டி பணத்திற்காக 2 மாத குழந்தை, மூதாட்டியை கடத்தி சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்து வட்டி குறித்து தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #usury #tamilnadu
Tags:    

Similar News