செய்திகள்

குடிபோதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற வாலிபர் கைது

Published On 2018-10-03 04:56 GMT   |   Update On 2018-10-03 04:56 GMT
அரியலூர் அருகே குடிபோதையில் போலீஸ்காரரை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள தூத்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமான்-கடம்பூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக கோமான் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 30) என் பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரை வழி மறித்த போலீசார், வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். இதில் அவர் நான் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியது உள்ளது. ஏன் எனது வண்டியை மறுக்கிறீர்கள் என சப்- இன்ஸ்பெக்டர் தேவராஜன் மற்றும் போலீஸ்காரர்கள் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் போலீஸ்காரர் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றதாக தெரிகிறது. பின்னர் தேவேந்திரனை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மோதல் நடந்தபோது அங்கு நின்ற சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் நேற்று வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில் தேவேந்திரன், போலீஸ் காரர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள், தேவேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்த தூத்தூர் போலீசார், தேதேவந்திரனை கைது செய்து அரியலூர் கோர்ட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் தேவேந்திரனை அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News