செய்திகள்

இந்த ஆண்டில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-09-29 21:03 GMT   |   Update On 2018-09-29 21:13 GMT
தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் உள்கர்நாடகாவில் முடியும் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைபெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்றும், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை குறித்து இந்திய வானிலை துறை முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்த ஆண்டில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை முதல் வடகர்நாடகம் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணத்தால் கடந்த 24 மணி நேரத்தில்(நேற்று முன்தினம்) தென்தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்து இருக்கிறது.

அடுத்த 2 நாட்களுக்கு (30-ந் தேதி மற்றும் 1-ந் தேதி) தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

குமரிக்கடல், தெற்கு கடலோர பகுதி, தென்தமிழக கடல் பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் சீற்றம் காணப்படும். மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் 30-ந் தேதி(இன்று) மாலை வரை மேற்சொன்ன கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News