செய்திகள்
மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஐ.ஜி. பொன்மாணிக்கவேல்

பழனி கோவில் சிலை முறைகேடு மீண்டும் விசாரணை தொடக்கம்- ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தகவல்

Published On 2018-09-17 13:12 GMT   |   Update On 2018-09-17 13:12 GMT
பழனி கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிலை மோசடி முறைகேடு தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கும் என்று தெரிவித்தார். #PonManickavel #Idols
பழனி:

அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்ட மூலவர் சிலை சேதமடைந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு மூலவர் சிலைக்கு பதிலாக புதிய ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு சிலை உருவாக்கப்பட்டு சில மாதங்களிலேயே மாற்றம் தென்பட்டதால் பக்தர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

மேலும் ஒரே கருவறையில் 2 சிலைகள் வைக்க எதிர்ப்பு கிளம்பவே ஐம்பொன் சிலை அகற்றப்பட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் சிலை மோசடி குறித்து விசாரணை நடத்திய ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையிலான போலீசார் பழனியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பழனி கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 2004-ம் ஆண்டு கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ளனர். அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபாலும் இவ்வழக்கில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் பெற்று உள்ளார்.

கடந்த சில மாதங்களாக இவ்வழக்கு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பழனி கோவிலுக்கு வந்தார். கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு மூலவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின் அடிவாரம் திரும்பிய ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிலை மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளோம். டி.எஸ்.பிக்கு பதில் கூடுதல் எஸ்.பி. மூலம் இறுதி கட்ட விசாரணை விரைவில் தொடங்கும். இவ்வழக்கில் மேலும் பலர் சிக்குவார்களா? என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel #Idols
Tags:    

Similar News