செய்திகள்
வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

சேலத்தில் 3 மணி நேரம் கொட்டிய மழை- 100 வீடுகளுக்குள்தண்ணீர் புகுந்தது

Published On 2018-09-15 04:27 GMT   |   Update On 2018-09-15 04:27 GMT
சேலத்தில் 3 மணி நேரம் கொட்டிய மழையால் அம்மாபேட்டைஜோதி தியேட்டர் பகுதி, கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டு பாலம் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. #SalemRain
சேலம்:

சேலத்தில் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்தனர்.

நேற்று காலை முதலே சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சேலத்தில் சாரல் மழை பெய்தது. இரவு 9 மணி முதல் 3 மணி நேரம் கனமழை பெய்தது.

இதில் சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, 5 ரோடு, ஜங்சன், கோரிமேடு என மாநகரின் அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மணக்காடு, களரம்பட்டி, ராஜகணபதி நகர், மணியனூர், சங்கர் நகர், பள்ளப்பட்டி, சின்னேரி வயக்காடு, பெரமனூர், நாராயணபிள்ளைதெரு, 5 ரோடு ஸ்ரீராம்நகர், திருவாகவுண்டனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் ஆறாக ஓடியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

அம்மாபேட்டைஜோதி தியேட்டர் பகுதி, கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டு பாலம், பெரமனூர், சங்கர்நகர், ஸ்ரீராம்நகர் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் வீடுகளுக்குள் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்பட எலக்ட்ராணிக் பொருட்களை கட்டில்களில் பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். மேலும் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்த மக்கள் பாத்திரங்கள் மூலம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் விடிய விடிய கொசுக்கடியால் தவித்தனர்.

இதே போல சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஏற்காட்டில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையை தொடர்ந்து நேற்றிரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:- சேலம் 70.6, ஓமலூர் 59.4, காடையாம்பட்டி 48, வீரகனூர் 23, தம்மம்பட்டி 22.6, ஏற்காடு 15, கரியகோவில் 5, வாழப்பாடி 2.7, சங்ககிரி 3, எடப்பாடி 1.4 என மாவட்டம் முழுவதும் 251.2 மி.மீ மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. #SalemRain
Tags:    

Similar News