செய்திகள்

திருச்சியில் நாளை நடைபெற இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் திருமணம் வரதட்சணையால் நிறுத்தம்

Published On 2018-09-11 05:44 GMT   |   Update On 2018-09-11 05:44 GMT
திருச்சியில் நாளை நடைபெற இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஆசிரியர் திருமணம் ரூ.15 லட்சம் வரதட்சணை பிரச்சனையால் நிறுத்தப்பட்டது. #Dowryharassment
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் துவ ரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சூரியகலா. இவருக்கும் மணப்பாறை அருகே சாம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் நாளை (12-ந்தேதி) மணப்பாறையில் நடைபெறுவதாக இருந்தது. அருண்குமார் மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.



இந்த நிலையில் அவர், சூரியகலாவிடம் தனக்கு ரூ.15 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று கூறினாராம்.

இதனால் மனம் உடைந்த சூரியகலா, இது தொடர்பாக அருண்குமாரின் தாய் மல்லிகா, மாமா கிருஷ்ணன், சகோதரி ஜெயபிரபா ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களும் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூரியகலா ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் ரூ.15 லட்சத்தை முழுமையாக தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சூரியகலா, மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், அருண்குமார் மற்றும் மல்லிகா, கிருஷ்ணன், ஜெயபிரபா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் அருண்குமார் தரப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மீதும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெற இருந்த திருமணம் வரதட்சணையால் நிறுத்தப்பட்டு விட்டது. #Dowryharassment
Tags:    

Similar News