செய்திகள்

தஞ்சை, நாகை, திருவாரூரில் கடையடைப்பு - மீனவர்கள் வேலைநிறுத்தம்

Published On 2018-09-10 07:23 GMT   |   Update On 2018-09-10 07:23 GMT
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று வியாபாரிகள் கடைகளை அடைத்தும், மீனவர்கள் கடலுக்கு செல்லாமலும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். #PetrolDieselPriceHike
தஞ்சாவூர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும், மீனவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்திலும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பஸ்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயங்கவில்லை. தஞ்சையில் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாபநாசம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லாரி, ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. மேலும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம், வலங்கைமான், கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, பேரளம், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு , மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயங்கின. மேலும் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை.

நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், வேதாரண்யம், தலைஞாயிறு, தரங்கம்பாடி, பொறையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, கோடியக்கரை பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #PetrolDieselPriceHike
Tags:    

Similar News