செய்திகள்

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் - தூத்துக்குடி கோர்ட்டில் சோபியா மனு

Published On 2018-09-07 04:18 GMT   |   Update On 2018-09-07 04:18 GMT
விசாரணைக்காக பறிமுதல் செய்த பழைய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடி கோர்ட்டில் மாணவி சோபியா மனு தாக்கல் செய்தார். #Sophia
தூத்துக்குடி:

தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா (வயது 28). இவர் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதே விமானத்தில் பயணம் செய்த பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், சோபியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போது, சோபியாவிடம் இருந்த பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பாஸ்போர்ட் பழைய பாஸ்போர்ட் என்பதால், சோபியாவின் புதிய பாஸ்போர்ட்டுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருடைய தந்தை சாமிக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் மாணவி சார்பில் வக்கீல் அதிசயகுமார் நேற்று காலை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை போலீசார் கடந்த 3-ந் தேதி விசாரணைக்காக எனது பழைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். அதற்கான எந்த அத்தாட்சி சான்றும் தரவில்லை. எனது அமெரிக்க விசா, பழைய பாஸ்போர்ட்டில் உள்ளது. ஆகையால் எனது பழைய பாஸ்போர்ட்டை எனக்கு திரும்ப ஒப்படைக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

கோர்ட்டில் ஏற்கப்பட்டு உள்ள இந்த மனு வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளதாக வக்கீல் தெரிவித்தார். #Sophia

Tags:    

Similar News