செய்திகள்

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு

Published On 2018-09-06 09:37 GMT   |   Update On 2018-09-06 09:37 GMT
சென்னை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #ChennaiCorporation
சென்னை:

சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு சொத்து வரி கடந்த மாதம் உயர்த்தி அறிக்கையில் கூறப்பட்டது. வீடுகளுக்கும், வணிக கட்டிடங்களுக்கும் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 12 லட்சத்து 14 ஆயிரம் பேர் சொத்து வரியினை செலுத்தி வருகிறார்கள்.

ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் அரையாண்டும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை இரண்டாம் அரையாண்டும் என்ற அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. முதல் அரையாண்டு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் புதிதாக நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரி எவ்வளவு என்பது இன்னும் தெரியவில்லை.

மாநகராட்சி சார்பில் சொத்து விளக்க அறிக்கை படிவம் கொடுக்கப்பட்டு விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. நீட்டிக்கப்பட்ட இந்த கால அவகாசம் வருகின்ற 16-ந்தேதியுடன் முடிகிறது. அதற்குள்ளாக சொத்து வரி செலுத்துக் கூடியவர்கள் அந்த படிவத்தினை பூர்த்தி செய்து மாநகராட்சி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே சொத்து வரி அதிகமாக வசூலிப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தன.

அதனால் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு விகிதத்தை குறைக்கவும், ஏற்கனவே உள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய 7 மண்டலங்களில் சொத்து வரி குறைவாக இருப்பதால் அதிகமாக்கவும் மாநகராட்சி பரிசீலனை செய்து வருகிறது.

இந்த நிலையில் உயர்த்தப்பட்ட சொத்து வரி எப்போது வசூலிக்கப்படும் என்ற கேள்வி பொது மக்களிடம் எழுந்துள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்துவரி செலுத்தி இருந்தாலும் கூட உயர்த்தப்பட்ட சொத்துவரி வித்தியாச தொகையினை மாநகராட்சி செலுத்த வேண்டும் என்று துணை கமி‌ஷனர் (வருவாய்) லலிதா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சொத்துவரி விவர அறிக்கை பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. வருகிற 16-ந்தேதி வரை அதனை பெறுவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டல வாரியாக புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு சொத்துவரி செலுத்துபவர்கள் விவரங்கள் தொகை, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி விவர அறிக்கை பெற்றதில் இருந்து ஒரு வாரத்திற்குள் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற ‘டிமாண்ட்’ வெளியிடப்படும். அதனை பார்த்து பொதுமக்கள் சொத்துவரியினை செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #ChennaiCorporation
Tags:    

Similar News