செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத்தொகை- அமைச்சர் சம்பத் தகவல்

Published On 2018-09-01 11:09 GMT   |   Update On 2018-09-01 11:09 GMT
பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். #TNMinister #MCSampath
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை மாற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும். மேலும் அவர்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் தயாரிப்பதற்கான வழிவகைகள் வழங்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பேரூராட்சி நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைத்து இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக்கிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #MCSampath
Tags:    

Similar News