செய்திகள்

கடவுளை வணங்கினால் குற்றங்கள் குறையும், வன்முறை ஏற்படாது - பன்வாரிலால் புரோகித்

Published On 2018-08-29 08:11 GMT   |   Update On 2018-08-29 08:11 GMT
கடவுளை வழிபட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும்; வன்முறையும் குறையும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். #TNGovernor #BanwarilalPurohit
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள டி.எஸ்.ராமன் விடுதியில் தியாகி லட்சுமணன் சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தியாகி லட்சுமணன் உருவ சிலையை திறந்து வைத்து பேசினார்.

சுதந்திரம் பெறுவதற்காக நமது நமது நாட்டில் எத்தனையோ தியாகிகள் உள்ளனர். அவர்களில் நாடு சுதந்திரம் பெறுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவர் தான் லட்சுமண அய்யர்.

மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் ஆவார். அவரது சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன்.

கலாசாரம் பண்பாட்டை நாம் பேணி காக்க வேண்டும். விவேகானந்தர் சகோதரர்-சகோதரிகள் என ஏன் அழைத்தார்? அது நம் கலாசாரம் ஆகும்.

அதுபோல அரிசன், சேவா சங்கத்துக்கு அயல்நாட்டுக்காரர்கள் ஏன் இங்கு வந்து சேவை செய்ய வேண்டும்?

நமக்கு நாமே சேவை செய்ய வேண்டும். அந்த நோக்கில்தான் காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட அரிசன் சேவா சங்கம் கோபி என்ற இந்த கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தியாகி லட்சுமணன் உழைத்து அதை வளர்த்துள்ளார்.

நன்றாக படித்து நமது கலாசாரத்தை காக்க வேண்டும். தமிழகத்தில் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக அந்த துறையின் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டுகிறேன்.

கடவுளை வழிபடுவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கடவுளை வழிபட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படும். வன்முறையும் குறையும்.

எளிமையான வாழ்க்கை வாழுங்கள். இப்படிப்பட்ட வாழ்க்கைதான் நம் நாட்டில் நிலவும் 100 சதவீத ஊழலை ஒழிக்க முடியும். தற்போது நமது நாட்டில் எளிமையான வாழ்க்கை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

இரவு தூங்கும் முன் கூட கடவுளை அனைவரும் வழிபட வேண்டும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் கடவுளுக்கு பயப்பட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

முன்னதாக கவர்னர் பேசும்போது தமிழில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சை ஆரம்பித்தார். #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News