செய்திகள்

ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - காவலாளி கைது

Published On 2018-08-27 04:26 GMT   |   Update On 2018-08-27 04:26 GMT
கிருஷ்ணகிரி அருகே ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் காவலாளியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அவரது நண்பர்கள் 2 பேரை தேடி வருகின்றனர். #ATMRobbery
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள மெயின் ரோட்டில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் விஜயன், சிதம்பரம், ரவிச்சந்திரன் என்ற 3 காவலாளிகள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த 24-ந் தேதி வங்கி ஊழியர்கள் வழக்கம் போல பணி முடிந்து சென்றனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று வங்கிக்கு விடுமுறையாகும். நேற்று முன்தினம் இரவு வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளி சிதம்பரம் பணியில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர், காவலாளி சிதம்பரத்தை கட்டி போட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களின் கொள்ளை முயற்சி நிறைவேறாததால் காவலாளி சிதம்பரத்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காரகுப்பம் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் போட்டு சென்றனர்.

இந்த நிலையில் காவலாளி சிதம்பரம் கொடுத்த தகவலின் பேரில் பர்கூர் டிஎஸ்பி தங்கவேல், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று காவலாளி சிதம்பரத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் காவலாளி சிதம்பரம் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவர் மீது சந்தேகப்பட்ட போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் நண்பர்கள் 2 பேர் உதவியுடன் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து காவலாளி சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர். அவரது திட்டப்படி கொள்ளையடிக்க வந்த அவரது நண்பர்களான திருப்பூரை சேர்ந்த வினோத், விஜயன் ஆகிய 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #ATMRobbery

Tags:    

Similar News