செய்திகள்
சோழவரம் ஏரி வறண்டு கிடப்பதை படத்தில் காணலாம்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரி வறண்டது

Published On 2018-08-25 02:22 GMT   |   Update On 2018-08-25 02:22 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டது. புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
செங்குன்றம் :

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரி, சோழவரம் ஏரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். நேற்றைய நிலவரப்படி புழல் ஏரியில் 777 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.

புழல் ஏரிக்கு, சோழவரம் ஏரியில் இருந்து 3 ராட்சத மின்மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 2 கன அடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சோழவரம் ஏரி நேற்று முற்றிலும் வறண்டது. இதனால் புழல் ஏரிக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

சோழவரம் ஏரி வறண்டதால் அங்கிருந்த மின்மோட்டார்கள் அனைத்தும் கழற்றப்பட்டன. புழல் ஏரிக்கு ஏற்கனவே நீர்வரத்து இல்லாமல் இருந்தது. சோழவரம் ஏரியில் இருந்து அனுப்பப்பட்டு வந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டாதல் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து தினமும் 84 கன அடி நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இதனால் புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. புழல் ஏரியில் கடந்த மாதம் 970 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. ஒரே மாதத்தில் 193 மில்லியன் கன அடி தண்ணீர் குறைந்துள்ளது.

Tags:    

Similar News