செய்திகள்

வேலூர் அருகே அரசு பஸ்களின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

Published On 2018-08-19 05:32 GMT   |   Update On 2018-08-19 05:32 GMT
வேலூர் அருகே கடந்த 12-ந்தேதி இரவு அடுத்தடுத்து 6 அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

வேலூர் அடுத்த மேல்வல்லம், சந்தனக் கொட்டாய், கண்ணமங்கலம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 12-ந்தேதி இரவு சுமார் 9 மணியளவில் அடுத்தடுத்து 6 அரசு பஸ்களின் கண்ணாடிகளை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி கடைத்து விட்டு தப்பி சென்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பஸ்களின் டிரைவர்கள் அளித்த புகாரின்பேரில் வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் பாகாயம் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் வேலூர் அடுத்த கொல்லைமேடு, புதூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 21), சித்தேரி தென்றல் நகரை சேர்ந்த சிவராஜ் (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் 2 பேரும் தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வருவதாகவும், துறைத் தலைவர் மீதுள்ள கோபத்தில் அரசு பஸ்களின் கண்ணாடிகளை உடைத்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. பிரவேஷ்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News