செய்திகள்

புதுக்கோட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.40 லட்சம் கஞ்சா பறிமுதல்

Published On 2018-08-10 04:38 GMT   |   Update On 2018-08-10 04:38 GMT
புதுக்கோட்டை அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். #Ganjasmuggling

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் வழியாக சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

இதில் தொடர்புடைய நபர்கள் பலர் பிடிபட்ட போதும் அந்த பகுதிகளில் போதிய கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த நிலையில் ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் கடத்தப்படுவதாக திருப்புனவாசல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்று அதி காலை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற் கொண்டனர். அப்போது அங்குள்ள கடலோர பகுதியில் நாட்டுப்படகும், அதன் அருகில் சிலர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கியதும் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் அந்த படகை சோதனை செய்தபோது அதில் 8 பண்டல்களில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 200 கிலோ எடை கொண்ட அதன் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும். இங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்த போலீசார் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற நபர்கள் யார்? யாருக்கு கடத்தப்படுகிறது? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அவ்வப்போது 10 கிலோ முதல் 50 கிலோ வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #Ganjasmuggling

Tags:    

Similar News