செய்திகள்

புதுக்கோட்டையில் இன்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பாதியில் வெளியேறிய ப.சிதம்பரம்

Published On 2018-08-05 11:27 GMT   |   Update On 2018-08-05 11:27 GMT
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் முன்னிலையிலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PChidambaram #congress

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்றார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் கட்சி வளர்ச் சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருந்தது.

இந்த நிலையில் கூட்டம் தொடங்கியதும், ப.சிதம்பரம் அமர்ந்திருந்த மேடை அருகே சென்ற காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு தரப்பினர், தங்களை ஒரு பிரிவினர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம், உறுப்பினர் சேர்க்கை போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் எங்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ப.சிதம்பரத்திடம் முறையிட்டனர்.

இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே வாக்கு வாதம், தள்ளுமுள்ள ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ப.சிதம்பரம் ஈடுபட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்குவாதத்தை கைவிடவில்லை. மேலும் நிர்வாகிகளுக்கு இடையே மோதல், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ப.சிதம்பரம் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

தமிழக காங்கிரசில் தொடர்ந்து கோஷ்டிபூசல் நிலவி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் வாக்குவாதம், மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கரூரில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PChidambaram #congress

Tags:    

Similar News