செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கம் அறநிலையத்துறை உதவி ஆணையர் பணியிடை நீக்கம்

Published On 2018-08-02 07:32 GMT   |   Update On 2018-08-02 07:32 GMT
சமயபுரம் கோவில் முறைகேடு புகார் உரிய விசாரணை நடத்தாத ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் ரத்தினவேலை சஸ்பெண்டு செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. #TrichySrirangam
திருச்சி:

தமிழகம் முழுவதும் சாமி சிலைகள் செய்ததில் பல கோடி மோசடி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே கோவில் மோசடி புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று இந்த சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அதுகுறித்த விபரம் வருமாறு:-

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலாகும். இங்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வருபவர் ரத்தினவேல்.

இதேபோல் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு பக்தர்களில் பெரும்பாலானோர் தங்களது வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனாகவும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் முடி உரிய காலத்தில் டெண்டர் விடப்படும். அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த கும்பாபிஷேக பணிக்காக ஏராளமான மின்சாதன பொருட்கள் வாங்கப்பட்டன.

மேலும் கட்டுமான பொருட்கள் வாங்கியதிலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் ரத்தின வேலை விசாரணை அதிகாரியாக அரசு நியமனம் செய்தது. இதற்காக விசாரணையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரத்தினவேல் தொடங்கினார்.

அவர் பல்வேறு கட்டங்களாக கோவில் ஊழியர்கள், முடி காணிக்கை செலுத்தியதன் மூலம் பெறப்படும் வருவாய் எவ்வளவு, அந்த முடி யாருக்கு கொடுக்கப்படும், கோவிலில் பயன்படுத்தப்படும் மின் சாதன பொருட்கள் எங்கு, யாரின் பரிந்துரையின் பேரில் வாங்கப்பட்டன, கட்டுமான பொருட்கள் விநியோகம் செய்தது யார்? என விசாரணை நடத்தினார்.

அதேபோல் இதற்கான டெண்டர் யார், யாருக்கு எந்த கால கட்டத்தில் வழங்கப்பட்டது என விசாரித்தார். ஆனால் இந்த விசாரணை எதுவுமே முறையாக நடத்தப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கிடைத்தது.

மேலும் லாப நோக்குடனும், சுய நலத்துடனும், மோசடி பேர்வழிகளுக்கு உடந்தையாக விசாரணை நடத்தியதாகவும் ரத்தினவேல் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. மேலும் சில புகார்கள் உரிய ஆதாரத்துடன் பக்தர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டன.

அத்துடன் விசாரணை தொடர்பான உண்மை நிலையினை அரசுக்கு அறிக்கையாக அளிப்பதிலும் தன்னிச்சையாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

இதன் எதிரொலியாக ரத்தினவேல் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை இந்த சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.

ரத்தினவேலின் பணிக்காலம் நேற்று முன்தினம், அதாவது 31.7.2018 தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் அவர் அன்றைய தினத்தில் இருந்தே சஸ்பெண்டு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News