செய்திகள்
கொலை செய்யப்பட்ட காளியம்மாள்

சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தலையில் கல்லைபோட்டு தாயை கொன்ற தொழிலாளி

Published On 2018-08-01 04:19 GMT   |   Update On 2018-08-01 04:19 GMT
சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறில் தலையில் கல்லைப்போட்டு தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Murdercase

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 4ம் தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி. இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 70). இவர்களுக்கு காளிமுத்து (52) என்ற மகனும், பொன்னுத்தாய் (45) மகளும் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

காளிமுத்து சுண்ணாம்பு காளவாசலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் மனைவி குழந்தைகளுடன் புளியங்குடி சாலை பகுதியில் வசித்து வருகிறார். காளியம்மாள் கக்கன்நகர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் காளியம்மாளுக்கும், காளிமுத்துவுக்கும் இடையே சில ஆண்டுகளாக நிலப் பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு காளியம்மாள் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் காளியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த காளிமுத்து நிலம் தொடர்பாக மீண்டும் தகராறு செய்துள்ளார். ஆத்திரம் அடங்காத அவர் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து காளியம்மாள் தலையில் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அலறியவாறு காளியம்மாள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்களை பார்த்த காளிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் படுகாயம் அடைந்த காளியம்மாள் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்ட காளிமுத்துவை தேடி வருகின்றனர். #Murdercase

Tags:    

Similar News