செய்திகள்
வீட்டு வாசலில் கிடந்த நகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் பார்வையிட்டார்.

வியாசர்பாடியில் மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-07-31 06:33 GMT   |   Update On 2018-07-31 06:33 GMT
வியாசர்பாடியில் மின்வாரிய அதிகாரியின் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பெரம்பூர்:

வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 24-வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். மின்வாரிய அதிகாரி.

நேற்று காலை 10 மணி அளவில் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி மணிமேகலை வீட்டை பூட்டி விட்டு துணி வாங்க கடைக்கு சென்றார்.

வீட்டின் சாவியை மறைவான ஒரு இடத்தில் வைத்து விட்டு போனார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டு சாவி வைத்த இடத்தில் இருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று அவர் பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்து 38 சவரன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் ரொக்க பணம் திருடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தார். திருட்டு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். திருடியவர்களின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது.

நேற்று மாலை முதல் இந்த திருட்டு குறித்து விசாரணை நடந்து வந்தது. தெரிந்தவர்கள் தான் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், அதே தெருவில் அருகில் உள்ள மணிமேகலையின் தந்தை வீட்டின் வாசலில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 25 சவரன் நகை கிடந்தது. நகையை திருடியவர்கள் போலீஸ் விசாரணைக்கு பயந்து இந்த நகையை அங்கு வீசிவிட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

மீதம் உள்ள 13 சவரன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவை என்ன ஆனது? இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News