செய்திகள்

கருணாநிதி உடல்நலக்குறைவு: தஞ்சை-கும்பகோணத்தில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

Published On 2018-07-30 05:37 GMT   |   Update On 2018-07-30 05:37 GMT
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை குறித்து பரவிய தகவலால் தஞ்சை மாவட்டத்தில் 6 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. #karunanidhi #dmk

தஞ்சாவூர்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கருணாநிதிக்கு திடீரென உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக வதந்தி கிளம்பியது. இதனால் சென்னை காவேரி ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும் இந்த செய்தி பரவியதால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதிக்கு உடல்நிலை குறித்து பரவிய தகவலால் தஞ்சை மாவட்டத்தில் 6 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயிலடி, மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களில் தலா ஒரு அரசு பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதேபோல் கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் மற்றும் செட்டி மண்டபம் பகுதியிலும் தலா ஒரு அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வெட்டிக்காடு பகுதியில் நேற்று இரவு சென்ற ஒரு அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

நேற்று இரவில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 6 அரசு பஸ்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இந்த நிலையில் இரவில் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் இன்று பஸ்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.

கும்பகோணம் பஸ் நிலையம் இன்று காலை பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பஸ்கள் அனைத்தும் பாதுகாப்பாக கும்பகோணம் அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டன.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #karunanidhi #dmk

Tags:    

Similar News