செய்திகள்

கருணாநிதிக்கு மருத்துவ உதவி வழங்க அரசு தயார் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published On 2018-07-28 06:04 GMT   |   Update On 2018-07-28 07:07 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கோரப்பட்டால், அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #KarunanidhiUnwell #KauveryHospital #EdappadiPalaniswamy
சேலம்:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சுற்றுலா மாளிகையில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலை எப்படி உள்ளது?

பதில்:- தி.மு.க.வின் மூத்த தலைவரான கருணாநிதி அவர்கள் நேற்று வீட்டிலயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவில் ரத்த உயர் அழுத்தம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவர் குணமடைந்து வருகிறார். ஏற்கனவே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.



கே:- தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மருத்துவ உதவிக்கு தமிழக அரசிடம் ஏதாவது உதவி கேட்டார்களா?

ப:- முன்னாள் முதலமைச்சராகவும், தி.மு.க.வின் நீண்ட கால தலைவராகவும் கருணாநிதி உள்ளார். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதுவரை அவர் தரப்பில் அரசிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. அப்படி கேட்டால் அரசு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது.

கே:- நீட் தேர்வில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ப:- உச்ச நீதிமன்ற தீர்ப்பு படி மத்திய அரசு நீட் தேர்வு வி‌ஷயத்தில் செயல்பட்டு வருகிறது. அது தமிழக பிரச்சினை மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் பிரச்சினை ஆகும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தொடர்பாக நாங்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.



  கே:- சேலம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள் என்ன?

ப:- திருவாக்கவுண்டனூர்- ஏ.வி.ஆர். ரவுண்டானாவில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சேலத்தில் 5 ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம், சேகோசர்வ் அருகே இரும்பாலை பிரிவு ரோட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரம். போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க அம்மா இருக்கும்போதே அவர்களிடம் தெரிவித்தோம். அவர் வளர்ச்சிப் பணிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கினார்.

அதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எந்த அளவுக்கு வேகமாக பணிகள் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

முள்ளுவாடி கேட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மணல் மேட்டில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் சேலம் மாவட்டத்தில் ரெயில்வே பாதைகளில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கைன் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர் உள்பட சில இடங்களில் விரைவில் பாலங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆத்தூர் புறவழிச்சாலை அமைக்க அம்மா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேபோல தாரமங்கலம் புறவழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கே:- கரியகோவில் - கோமுகி அணை இணைக்கப்படுமா?

ப:- தமிழகம் முழுவதும் இதுபோல திட்டங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்து வருகிறது. விரைவில் அரசுக்கு அந்த அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன்பிறகு அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்.

கே:- சேலத்தில் பஸ்போர்ட் அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?

ப:- பஸ்போர்ட் அமைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது. மத்திய அரசிடம் எடுத்துக்கூறி விரைவில் அதற்கான பணத்தைப் பெற்று பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #KarunanidhiUnwell #KauveryHospital #EdappadiPalaniswamy
Tags:    

Similar News