செய்திகள்

போலி பயிற்சியாளர் ஆறுமுகம் சிறையில் அடைப்பு

Published On 2018-07-21 04:28 GMT   |   Update On 2018-07-21 04:28 GMT
கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது மாணவியை தள்ளி கொன்றது தொடர்பாக போலீஸ் விசாரணை முடிந்து போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Logeshwari
கோவை:

கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறாமல், போலி சான்றிதழ் மற்றும் கடிதம் தயாரித்து 6 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோட்டில் மனுதாக்கல் செய்தனர். கடந்த 17-ந் தேதி முதல் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆறுமுகத்தை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்ததாக கூறினார்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்த யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம் கூறினார். பின்னர் தனிப்படை போலீசார் யோகானந்தத்தை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் 4 நாள் போலீஸ் காவல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து போலீசார் அவரை அழைத்து வந்து 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர் ஆறுமுகத்தை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் ஆறுமுகத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  #Logeshwari
Tags:    

Similar News