செய்திகள்

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தந்தையிடம் சி.பி.ஐ. அறிக்கையை ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-19 10:33 GMT   |   Update On 2018-07-19 10:33 GMT
தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் சி.பி.ஐ. அறிக்கையை ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DSPVishnuPriya #CBIReport
கோவை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தான் வி‌ஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதில் யாரும் குற்றவாளிகள் இல்லை. எனவே வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிவித்தது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. அறிக்கையை தங்களுக்கு தர வேண்டும் என ரவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த கோர்ட்டு சி.பி.ஐ. அறிக்கையை ரவிக்கு வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளின் அறிக்கையை கொடுக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த அறிக்கை ரவியிடம் வழங்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி துரைராஜ் உத்தரவிட்டார்.

பின்னர் கோர்ட்டில் இருந்து தனது வக்கீல் அருண்மொழியுடன் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வெளியே வந்தார். இது குறித்து வக்கீல் அருண் மொழி கூறியதாவது-

விஷ்ணு பிரியா மரணத்தில் நிறைய சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை கேட்டு மனு தாக்கல் செய்தோம். சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த சாட்சிகளை விசாரித்தார்கள். என்னென்ன ஆவணம் கேட்டு இருந்தனர் என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை கேட்டு இருந்தோம். கோர்ட்டும் சி.பி.ஐ. அறிக்கை வழங்க உத்தரவிட்டது.

ஆனால் போலீசார் சி.பி.ஐ. அறிக்கையை வழங்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை அறிக்கையை அளித்து உள்ளனர். மீண்டும் சி.பி.ஐ. அறிக்கையை வழங்க கேட்டு உள்ளோம். கோர்ட்டும் வழங்க உத்தரவிட்டு உள்ளது. விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். #DSPVishnuPriya #CBIReport
Tags:    

Similar News