செய்திகள்
மீட்கப்பட்ட சிலை

காஞ்சீபுரம் கோவிலில் திடீர் சாமி சிலை: தந்தை - மகனிடம் விசாரணை

Published On 2018-07-17 07:28 GMT   |   Update On 2018-07-17 07:28 GMT
காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம்:

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் அருகே கங்கையம்மன் கோவில் உள்ளது.

இங்கு பணிபுரியும் அர்ச்சகர் பணிக்கு வராததால் நேற்று இரவு கோவிலை பூட்ட அப்பகுதி மக்கள் சென்றனர்.

அப்போது உட்பிரகாரக் கதவு அருகே ஒன்றரை அடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் கொண்ட உலோகச் சிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவர் போலீசாரிடம் கூறும் போது “எனது மகன் மகேந்திரன், திருப்போரூர் பகுதியில் இருந்து இந்த சாமி சிலையை வாங்கி வந்து கடந்த 6 மாதமாக வீட்டில் வைத்து பூஜை செய்தான்.

வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிலர் இந்த சிலையை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று கூறியதால் அதனை அம்மன் கோயிலில் வைத்தான்” என்று கூறினார்.

இதையடுத்து பன்னீர் செல்வம் அவரது மகன் மகேந்திரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமி சிலை எங்கு வாங்கப்பட்டது? விற்றவர்கள் யார்? எதற்காக வாங்கப்பட்டது என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் நகரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News