செய்திகள்

ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று அழைக்க கூடாது- தொண்டர்களுக்கு கமல் அறிவுரை

Published On 2018-07-14 11:07 IST   |   Update On 2018-07-14 11:07:00 IST
ஆழ்வாபேட்டை ஆண்டவரே என்று அழைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் மதுரை செல்வதற்காக நேற்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி :- அமாவாசை அன்று கொடியேற்றியதால் தமிழிசை உங்களை போலி பகுத்தறிவுவாதி என்று விமர்சித்துள்ளாரே?

பதில் :- பல்வேறு தரப்பினரும் பல்வேறு மதத்தினரும் நம்பிக்கை உடையவர்களும் என் கட்சியில் உள்ளனர். என் மகள் சுருதியைப் பகுத்தறிவு வாதி என்று கூற முடியாது. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு மட்டும் நான் கட்சி ஆரம்பித்திருந்தால் தவறாகக் கூறலாம். ஆனால், ஏழ்மையையும் ஊழலையும் ஒழிப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லோர் உதவியும் தேவைப்படுகிறது.

கே :- கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஆழ்வார்பேட்டை ஆண்டவரே என்று கோ‌ஷம் எழுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?

ப :- ஆம், சர்ச்சைதான். இது பழையக் கூக்குரல், தவிர்க்கத்தான் வேண்டும். அது தொடர்பாக வந்த விமர்சனங்கள் எல்லாம் சரியானவையே. இதைத் தவிர்ப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். இனி இதுபோன்று நிகழாது என்று வாக்குறுதி அளிக்கிறேன். மற்றபடி அந்த நிகழ்வுக்கு நான் பொறுப்பல்ல. என்னுடைய கட்சியில் இருப்பவர்கள் இதற்கு ஏற்பாடு செய்திருந்தால் அவர்களைக் கண்டிக்கிறேன்

கே :- நாடு முழுவதிலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறை குறித்து பேசப்படுகிறதே?

ப :- சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஒரே குவியலாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து.

கே :- முட்டை முறைகேடு பெரிய விவகாரமாகி வருகிறதே?

ப :- முட்டை முறைகேடு விவகாரத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பாகவே எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது, இது பொய்க் குற்றச்சாட்டு என்று கூறியவர்கள்தான் தற்போது மாட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதையெல்லாம் ஒழிப்பதுதான் முக்கிய வேலையாக எங்களுக்குத் தோன்றுகிறது

கே :- கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் நிகழ்ந்த மாணவி மரணம்?

ப:- மாணவியின் மரணம் கண்டிக்கத்தக்க ஒன்று கல்வி நிறுவனங்களின் உயரம் வளர்ந்தால் மட்டும் போதாது, கல்வியின் தரமும் உயர வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News