செய்திகள்

தினகரனுடன் சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி

Published On 2018-07-13 10:08 GMT   |   Update On 2018-07-13 10:08 GMT
ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுடன் சென்றவர்கள் மீண்டும் எங்களிடம் வருவார்கள் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். #dinakaran #spvelumani

கோவை:

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்தில் வெளியூர்களில் இருந்து ஆட்கள் திரட்டி வந்துள்ளார். தினகரன் எங்கெங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் குறிப்பிட்ட கும்பல் சென்று வருகிறது. ஒரே முகங்களைத்தான் இந்த கூட்டங்களில் காண முடிகிறது. கோவையில் கூட்டத்தை கூட்டி வந்து பொதுக்கூட்டம் நடத்தி உள்ளனர். திருப்பூரில் பனியன் தொழிலாளர்களாக பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் இந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

ஜெயலலிதாவினால் 10 ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் டி.டி.வி.தினகரன். வீட்டு பக்கமோ, நாடாளுமன்றத்துக்கோ செல்லக்கூடாது என்று நடவடிக்கை எடுக்கப்பட்டவர்தான் இவர். இப்போது நான்தான் தலைவர் என்று கூறி வரும் அவருடன் சிலர் சென்று வருகிறார்கள். மீண்டும் அவர்கள் எங்களிடம் வந்து விடுவார்கள்.

நாங்கள் கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது கஷ்டப்பட்டு உள்ளோம். ஒவ்வொருவரும் கட்சிக்காக கஷ்டப்பட்டு உள்ளனர். சிறைக்கும் சென்றுள்ளனர். பாடுபட்டு கட்சியை பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற வைத்துள்ளனர். இதில் டி.டி.வி. தினகரனின் பங்கு என்ன?. ஜெயலலிதா இருக்கும்வரை அவரை பக்கத்திலேயே விடவில்லை. இப்போது நான்தான் வாரிசு என்கிறார். அது நடக்காது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக பாடுபட்டு உள்ளனர். எனவே இப்போது கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. காவிரி பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதால் இப்போது பெய்த மழையில் ஆறு, குளங்கள் நிரம்பி வருகின்றன. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இதனை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுய விளம்பரத்துக்காக கூட்டங்கள் நடத்தி குறுகிய கும்பலை வைத்து செயல்பட்டு வரும் டி.டி.வி. தினகரனின் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.

தனக்கு பிறகு இந்த இயக்கம் 100 ஆண்டுகாலம் நிலைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருந்தார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. எனவே இந்த கட்சி 100 ஆண்டுகாலம் நிலைக்கும். நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எவராலும் அ.தி.மு.க.வை நெருங்கி பிடிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #spvelumani

Tags:    

Similar News