செய்திகள்

கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம்: முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைத்தனர்

Published On 2018-07-01 18:25 IST   |   Update On 2018-07-01 18:25:00 IST
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் 90 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர். #edappadipalanisamy #opanneerselvam

கிருஷ்ணகிரி:

அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்.அரங்கில் இன்று 90 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது.

இந்த திருமணங்களை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தனர்.

இந்த திருமண விழாவுக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அசோக்குமார் எம்.பி. மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணம் செய்த 90 ஜோடிகளில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். மணமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, குத்துவிளக்குகள், காமாட்சி விளக்கு, கட்டில், மெத்தை, தலையணை, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், பீரோ, குடங்கள், அண்டா, பூஜை சாமான்கள் ஆகியவை உள்ளிட்ட 35 வகையான சீர் வரிசை பொருட்களாக மணமக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. மணமகனுக்கு பட்டு வேட்டியும், பட்டு சட்டையும், மணமகளுக்கு பட்டுச் சேலை மற்றும் துணிகளும் வழங்கப்பட்டன. #edappadipalanisamy #opanneerselvam

Tags:    

Similar News