செய்திகள்

அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கல்வி சீர்வரிசையாக வழங்கிய பொதுமக்கள்

Published On 2018-06-25 17:18 GMT   |   Update On 2018-06-25 17:18 GMT
கரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியின் தேவைக்காக ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்.
கரூர்:

கரூர் அருகேயுள்ள மண்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியாம்பாளையம் எனும் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியானது சிறிய கட்டிடத்தில் இயங்கிய போதிலும் மாணவர்களின் கல்வியையும், அவர்களது தனித்திறமையையும் மேம்படுத்துவதில் ஆசிரிய- ஆசிரியைகள் ஆர்வமாக செயல்படுகின்றனர். மேலும் மாணவர்களிடத்தில் உள்ள நிறை- குறைகளை அவர்களது பெற்றோரிடத்தில் எடுத்து கூறி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனால் ஊர் பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோரும் இந்த பள்ளியை மேம்படுத்துவதற்காக தங்களால் இயன்ற உதவியை அவ்வப்போது செய்து வருகின்றனர். இதன் காரணமாக பெற்றோர்- ஆசிரியர்களிடத்தில் சரியான புரிதல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் 2018-19-ம் கல்வி ஆண்டில் சிவியாம் பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீர்வரிசையாக கொடுக்க பொதுமக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி நேற்று ஊரில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் நோட்டு புத்தகம், பேனா-பென்சில் பாக்கெட்டுகள், சாக்பீஸ் பெட்டிகள், கடிகாரங்கள் உள்பட ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றனர். பின்னர் திருமண சீர்வரிசை கொண்டு வருவதை போல தாம்பூல தட்டுகளில் அந்த பொருட்களை வைத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை பெமினா விழிமலரிடம் அந்த பொருட்களை கல்வி சீர்வரிசையாக ஒப்படைத்தனர்.

அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா வரவேற்று பேசினார். ஊரின் ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிராம கல்விக்குழு தலைவர் மகேஷ் மற்றும் இந்திராணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தலைமை ஆசிரியை பெமினா விழிமலர் பேசினார்.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகத்தினை போன் மூலம் தொடர்பு கொண்ட மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சாமியப்பன், பொதுமக்கள்- பள்ளி ஆசிரியர்கள் நல்லுறவு தொடர வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சிவியாம்பாளையத்தில் தொடக்க பள்ளி முடிந்ததும் அடுத்த கட்ட கல்வி பயில சில கிலோ மீட்டர் தூரம் மாணவர்கள் செல்ல வேண்டியிருக்கிறது. சரியான பஸ் வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தினமும் காலை, மாலை வேளையில் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News