செய்திகள்

திருவள்ளூரில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு நடமாட்டம் - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2018-06-25 09:03 GMT   |   Update On 2018-06-25 09:03 GMT
கள்ள நோட்டுடன் வட மாநில வாலிபர்கள் சிக்கிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளுவரை அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் பத்மநாபன். நேற்று மாலை அவரது கடைக்கு சோப்பு வாங்க 2 வட மாநில வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் 2 ஆயிரம் நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கினர். கடையில் சில்லரை இல்லாததால் அருகில் உள்ள பால் கடைக்கு சென்று மாற்றி, மீதி பணத்தை வட மாநில வாலிபர்களிடம் பத்மநாபன் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் அந்த பால் கடை உரிமையாளரிடம் பணத்தை பெறுவதற்காக மொத்த விற்பனையாளர் ஒருவர் வந்தார். அவர் பணம் பெற்ற போது ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு என்று தெரிந்தது.

இது பற்றி வியாபாரி பத்மநாபனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று வடமாநில வாலிபர்கள் குறித்து விசாரித்தார்.

அப்போது அங்கு நின்ற கள்ள நோட்டு கொடுத்த 2 வட மாநில வாலிபர்களை பிடித்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சர்பி ஆலம் (23), சபீர் (21) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் 13 கைப்பற்றப்பட்டது.

அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “கடந்த 3 நாட்களுக்கு முன்பு பீகாரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தோம். சென்னையில் ஏதோ வேலை இருப்பதாக சொல்லி ஒருவர் வரச் சொன்னார். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த போது கள்ள நோட்டுகளை கொடுத்து அதனை மாற்றச் சொன்னார்.

பணத்தை மீண்டும் இதே இடத்திற்கு வந்து தருமாறு கூறினார். பணம் கொடுத்தவர் யார்? அவரைப்பற்றி எந்த விவரமும் தெரியாது” என்று கூறி உள்ளனர்.

வேலை வழங்குவதாக வட மாநில வாலிபர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை கள்ள நோட்டுகளை மாற்ற மர்ம கும்பல் பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கள்ள நோட்டு கும்பல் பல குழுக்களாக பிரிந்து பணத்தை மாற்ற கொடுத்து இருக்கிறார்கள். இதனால் முக்கிய குற்றவாளி யார்? என்பது தெரியாமல் போலீசர் குழம்பி உள்ளனர்.

கைதான வடமாநில வாலிபர்கள் இருவரும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பணத்தை கொடுத்தது சந்தோஷ் என்ற பெயரை தெரிவித்து இருக்கிறார்கள். அவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் கள்ள நோட்டு கும்பல் புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பணத்தை மாற்ற குழுக்களாக வட மாநில வாலிபர்களை அனுப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கள்ள நோட்டுடன் வட மாநில வாலிபர்கள் சிக்கிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க வியாபாரிகள் மறுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News