செய்திகள்

சிவகாசியில் மது குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் - விஷம் வைத்த 2 பேர் கைது

Published On 2018-06-25 09:06 IST   |   Update On 2018-06-25 09:06:00 IST
சிவகாசியில் மதுபானம் குடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பு முனையாக, உயிரிழந்தவரின் அக்காள் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Sivakasi #PoisoningDeaths
சிவகாசி:

சிவகாசியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று மதுபானம் வாங்கிக் குடித்த சிலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இதில், காமராஜர் காலனியை சேர்ந்த கணேசன் (21), வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி கவுதம்(15), முத்தாட்சிமடத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் உயிரிழந்தார்கள். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 கடைகளில் மது வாங்கி குடித்தவர்கள் பாதிக்கப்பட்டதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. அதேசமயம், மதுவில் யாராவது விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடங்கியது.



போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோழிக்கறியில் விஷம் கலந்துகொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. முருகனின் அக்கா வள்ளியும் அதே பகுதியைச் சேர்ந்த அச்சக அதிபர் செல்வமும் நெருங்கி பழகியதாகவும், அதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த வள்ளியும் செல்வமும் சேர்ந்து முருகனை தீர்த்துக் கட்ட கோழிக்கறியில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக்கொண்டு நண்பர்களுடன் மது அருந்தும் போது சாப்பிட்டதால் முருகன் உள்ளிட்ட 4 பேரும் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வள்ளியையும் செல்வத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Sivakasi #PoisoningDeaths

Tags:    

Similar News