செய்திகள்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி- தினகரன் கட்சியினர் 47 பேர் கைது

Published On 2018-06-21 06:44 GMT   |   Update On 2018-06-21 06:44 GMT
மயிலாடுதுறையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சி செய்தது தொடர்பாக தினகரன் கட்சியினர் 47 பேரை போலீசார் கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
மயிலாடுதுறை:

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூரில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் பேசும்போது ‘‘ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சுருட்டியவர் டி.டி.வி.தினகரன்’’ என்று கூறினார்.

இதனை கண்டித்தும், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அவரது உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

முன்னதாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் இருந்து நாகை வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் தலைமையில் அந்த கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகே கிட்டப்பா அங்காடி வந்தடைந்தவுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள், திடீரென திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை கைப்பற்றினர்.

பின்னர் போலீசார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மாவட்ட செயலாளர் செந்தமிழன் உள்பட 47 பேரை கைது செய்தனர். #AMMK #MinisterDindigulSrinivasan
Tags:    

Similar News