செய்திகள்

புதிதாக அமைய உள்ள செய்யூர் விமான நிலையத்தால் புதுவை முன்னேற வாய்ப்பு

Published On 2018-06-20 09:43 GMT   |   Update On 2018-06-20 09:43 GMT
சென்னையை ஒட்டி புதிதாக அமைய உள்ள செய்யூர் விமான நிலையத்தால் புதுவை மாநிலம் பல்வேறு வகையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய போதிய இட வசதி அங்கு இல்லை.

எனவே, சென்னையை ஒட்டி புதிதாக விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இடம் தேடினார்கள்.

ஆனால், ஒரு சில இடங்களில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அங்கு விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது மதுராந்தகம் அருகே உள்ள செய்யூரில் விமான நிலையம் அமைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அங்கு 8 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கைப்பற்றி பிரமாண்ட அளவில் விமான நிலையம் அமைக்க இருக்கிறார்கள். இது, சர்வதேச விமான நிலையமாக செயல்படும்.

இந்த விமான நிலையம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால், புதுவையில் இருந்து 60 கி.மீட்டர் தூரமே உள்ளது.

புதுவையில் சிறிய அளவில் விமான நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது விமான போக்குவரத்து தொடங்குவதும், பின்னர் நிறுத்துவதுமாக இருக்கிறது.

இந்த விமான நிலையத்தில் குட்டி விமானங்கள் தான் இறங்க முடியும். பெரிய விமானங்கள் இறங்குவதற்கான நீண்ட ஓடு தளம் இல்லை. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு போதுமான நிலமும் புதுவை மாநில எல்லைக்குள் இல்லை.

அதற்கு விமான நிலையத்தை ஒட்டி உள்ள தமிழக பகுதியில் இருந்து நிலம் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை நிலம் வழங்க முன்வரவில்லை.

இதன் காரணமாக விமான தள ஓடுபாதையை விரிவாக்கம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனால் புதுவையில் விமான நிலையம் இருந்தும் போதிய பயனற்றதாக உள்ளது. இதன் காரணமாகவே புதுவையின் வளர்ச்சியும் தடைபடுகிறது.

ஆனால், இப்போது தமிழக அரசு சென்னையை ஒட்டி அமைக்க உள்ள செய்யூர் விமான நிலையம் சென்னையை விட புதுவைக்குதான் மிக அருகில் இருக்கிறது.

புதுவையில் இருந்து மரக்காணம், எல்லையம்மன் கோவில் வழியாக செய்யூர் பகுதிக்கு சென்று விடலாம். இங்கிருந்து 60 கி.மீ. தூரமே அந்த பகுதி இருக்கிறது.

புதுவையில் இருந்து காரில் சென்றால் 40 நிமிடத்தில் அந்த இடத்தை அடைந்து விடலாம். எனவே, இந்த விமான நிலையம் புதுவைக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இதனால் புதுவை மாநிலம் பல்வேறு வகையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News