செய்திகள்

பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நீரை பெற நடவடிக்கை தேவை - ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2018-06-12 07:01 GMT   |   Update On 2018-06-12 07:01 GMT
பலத்த மழை பெய்து வருவதால் காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #Ramadoss #CauveryManagementBoard

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் இயலாமையால், மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்திருப்பதால் கர்நாடக அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 50,000 கன அடியை தாண்டியிருக்கக் கூடும். அணைகளின் நீர் இருப்பும் 25 டி.எம்.சியைத் தாண்டியிருக்கக் கூடும். இது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு போதுமானதாகும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சியும், ஜூலையில் 34 டி.எம்.சியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான அறிவிக்கை கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே ஆணையத்தில் தமிழகத்தின் பகுதி நேர உறுப்பினர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் 10 நாட்களாகியும் கர்நாடக அரசின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக இன்றைக்குள் உறுப்பினரை அறிவிக்கும்படி கர்நாடக அரசுக்கு கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.


ஆனால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்துவதற்காக இன்றும் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு அறிவிக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு அறிவிக்கப்படாத சூழலில், அதைக் காரணம் காட்டி ஆணையத்தின் முதல் கூட்டம் தாமதப்படுத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு மேலும் பாதகத்தை ஏற்படுத்தும். அது குறுவை சாகுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாக தகர்த்துவிடக் கூடும்.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர் பெயரை கர்நாடக அரசு இன்றைக்குள் அறிவிக்காவிட்டால், இது வரை நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் உடனடியாகக் கூட்ட வேண்டும்.

அதில் தமிழகத்திற்கு முதல்கட்டமாக ஜூன்- ஜூலை மாதத்திற்கான 44 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையம் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை ஆணையத்தின் அனுமதியின்றி உள்ளூர் பாசனத்திற்காக கர்நாடக அரசு திறக்கக்கூடாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #CauveryManagementBoard

Tags:    

Similar News