செய்திகள்

மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 4 சீருடைகள் வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-06-11 04:36 GMT   |   Update On 2018-06-11 04:36 GMT
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள திட்டமலையில் ரூ.10 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.

தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய- மாநில அரசுகள் துணையுடன் நம்பியூர் அருகே  உள்ள கொளப்பலூரில் டெக்ஸ்டைல் பார்க் என சொல்லக் கூடிய ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

இங்கு 8 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும்.

மத்திய அரசு கொண்டு வரும் எந்தபொது தேர்வு ஆனாலும் அதை தமிழக மாணவர்கள் மிக எளிதாக அணுகக்கூடிய அளவில் தற்போதைய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் சரளமாக பேச, லண்டன், ஜெர்மனி நாடுகளில் இருந்து 600 சிறப்பு ஆசிரியர்கள் தமிழகம் வந்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு 6  வார காலம் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிகள் யாவும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரப்படும்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 4 சீருடைகள் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News