செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

Published On 2018-06-09 10:11 GMT   |   Update On 2018-06-09 10:11 GMT
பணி நீக்கம் செய்ததால் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த பெண் ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) டெய்லர் . இவரது மனைவி புவனேஷ்வரி(34). இவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவரை பணியில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனேஷ்வரி மன வேதனை அடைந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீவிர சிகிச்சையில் இருந்தப்போது புவனேஷ்வரி கூறியதாவது,

ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தப் போது நோயாளியுடன் வந்த அட்டண்டர் ஒருவர் கொடுத்த டீயை குடித்ததற்காக பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். மன்னிப்புக் கடிதம் கொடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் நீக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கி விட்டு வேறு ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்துள்ளார்கள். என்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறினேன்.

இது குறித்து தனியார் ஒப்பந்த நிறுவன சூப்ரவைசரிடம் கேட்டதற்கு, புவனேஷ்வரி மீது லஞ்ச புகார் வந்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News