செய்திகள்

கள்ளநோட்டுகளை அச்சடித்து கைதானவர் முதலமைச்சருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானதால் பரபரப்பு

Published On 2018-06-08 09:41 IST   |   Update On 2018-06-08 09:41:00 IST
கோவையில் கள்ளநோட்டுகளை அச்சடித்த வழக்கில் கைதானவர் முதலமைச்சருடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.#fakecurrency #TNCM
கோவை:

கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 31). இவர் தனது நண்பர்களான கிதர் முகமது, சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டார். இதையடுத்து ஆனந்த், கிதர் முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுந்தர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த நிலையில் ஆனந்த், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களுடன் எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் கள்ளநோட்டுகள் கும்பலுடன் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற வாசகமும் இடம் பெற்று உள்ளது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சருடன் ஆனந்த் இருப்பது போன்று பரவி வரும் புகைப்படம் உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அத்துடன் அந்த புகைப்படத்தில் இருக்கும் மற்ற நபர்களிடமும் இது உண்மையாக எடுக்கப்பட்டதா? அப்படி என்றால் எப்போது எடுக்கப்பட்டது? அங்கு ஏன் ஆனந்த் வந்தார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்தால், புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #fakecurrency #TNCM
Tags:    

Similar News