செய்திகள்

காலா படம் வெளியான தியேட்டரில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி ரசிகர்கள்

Published On 2018-06-07 05:14 GMT   |   Update On 2018-06-07 05:14 GMT
தூத்துக்குடியில் ‘காலா’ படம் வெளியான தியேட்டரில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு ரஜினி ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது ரஜினி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்வது சரியல்ல என்று கூறும் ரஜினியின் ‘காலா’ படத்தில் போராட்ட காட்சிகள் இடம் பெற்றிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படம் இன்று வெளியானது. தூத்துக்குடியில் ‘காலா’ படம் காசிக்கடை பஜாரில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதற்காக ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் காலையிலேயே அந்த தியேட்டரின் முன் திரண்டனர்.

பின்பு 8.30 மணியளவில் ரசிகர்கள் அனைவரும் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர். படம் திரையிடுவதற்கு முன்பாகவே தியேட்டருக்குள் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் திடீரென எழுந்து நின்றனர். ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரையின் அருகில் நிற்க, மற்றவர்கள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன் எழுந்து நின்றனர். பின்பு அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து ‘காலா’ படம் திரையிடப்பட்டது. அதனை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News