செய்திகள்

திருப்பூரில் திருமண மண்டபத்தில் இருந்து தப்பிய புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2018-06-02 11:02 IST   |   Update On 2018-06-02 11:02:00 IST
திருப்பூரில் திருமண மண்டபத்தில் இருந்து தப்பிய புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் ராயபுரம், சூசையாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). பனியன் கம்பெனி ஊழியர். இவருக்கும் பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 27-ந்தேதி திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 26-ந்தேதி இரவு பழனியில் உள்ள திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணும், மணமகனும் வந்தனர். உறவினர்கள் தங்கள் குடும்பத்துடன் இரவில் தங்கினர். காலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென புதுமாப்பிள்ளை சந்தோஷ் நள்ளிரவில் மாயமாகி விட்டார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியபோது அவர் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

இதனால் திருமண மண்டபம் களை இழந்தது. விசாரணையில் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது என்றும் இது மணமகனுக்கு தெரியவந்ததும் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரியவந்தது.

இதனிடையே இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெரியோர் தலையிட்டு இதுவரை நடந்த செலவை பாதி பாதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதின்பேரில் இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் மணக்கோலத்திலேயே பெண் வீட்டுக்கு சென்றார்.

சந்தோசின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் திருப்பூர் வந்தனர். இங்கு வந்து பார்த்தபோது இங்கும் சந்தோஷை காணவில்லை.

இந்நிலையில் கடந்த 31-ந்தேதி இரவு சந்தோஷ் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டியதாக தெரிகிறது. எதுவும் பேசாமல் தனது அறைக்கு சந்தோஷ் தூங்க சென்றார்.

காலை கதவை திறந்து பார்த்தபோது சந்தோஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News