செய்திகள்

காங்கிரசுக்கு எம்.பி. தொகுதியை விட்டு கொடுக்க முடியாது: தி.மு.க. பதிலடி

Published On 2018-06-01 11:04 GMT   |   Update On 2018-06-01 11:04 GMT
புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் பாராளு மன்ற தேர்தலுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

புதுவை எம்.பி. தொகுதியில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியிருந்தார்.

மேலும் புதுவை எம்.பி. தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். இதற்கு புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

எம்.பி. தொகுதியை விட்டுத்தர மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியதால், நாங்களும் கருத்து கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதுவை லோக்சபா தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது உறுதி. அதற்காக புதுவையில் இருந்து சென்னை வரை அங்கபிரதட்சணமாக சென்று கூட கட்சி தலைமையிடம் வலியுறுத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் நாராயணசாமி, ராஜ்ய சபாவுக்கு சென்றதும், 2009-ம் ஆண்டு லோக் சபாவுக்கு சென்றதும் தி.மு.க. கூட்டணியால்தான்.

அதே போன்று மோகன் குமாரமங்கலம், சண்முகம், பரூக் என காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர்கள் தி.மு.க. கூட்டணி தயவில் தான் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் இதுவரை கூட்டணி தயவின்றி வெற்றி பெற்றது கிடையாது.

புதுவை எம்.பி. தொகுதியை கேட்கும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உள்ளதோ, அதே போல் எங்களுக்கும் தொகுதியை கேட்க உரிமை உள்ளது. கண்டிப்பாக வரும் லோக்சபா தேர்தலில் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

இவ்வாறு சிவா கூறினார்.

இது தொடர்பாக தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், கூறும் போது, தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது என்றார்.

புதுவையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- தி.மு.க. இருகட்சிகளுமே புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட குறி வைத்திருப்பது கூட்டணியில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News