செய்திகள்
தாக்குதல் சம்பவம் குறித்து அய்யாக்கண்ணுவிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் விசாரணை நடத்திய காட்சி.

அய்யாக்கண்ணுடன் வந்த கார் கண்ணாடி உடைப்பு- 2 பேர் காயம்

Published On 2018-05-31 09:54 GMT   |   Update On 2018-05-31 09:54 GMT
அரக்கோணத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர்.
அரக்கோணம்:

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

நேற்று காஞ்சீபுரத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு அரக்கோணம் வழியாக திருத்தணி செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.

அரக்கோணம் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு திருத்தணிக்கு செல்வதற்காக அய்யாக்கண்ணு காரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த பா.ஜனதாவினர் திடீரென அய்யாக்கண்ணு இருந்த காரின் கதவை திறந்து தாக்க முயற்சித்தனர்.

அப்போது அய்யாக்கண்ணுவின் நண்பர், காரின் கதவை மூடி அவரை அனுப்பி வைத்தார். எனினும், அவரது காருக்கு பின்னால் சங்க நிர்வாகிகள் வந்த வேனை மடக்கி கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.

இதில் வேனில் இருந்த பெரியசாமி (வயது 75), காமராஜ் (74) ஆகிய 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அய்யாக்கண்ணு காயமடைந்தவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காயமடைந்த பெரியசாமி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம் நகர பா.ஜனதா முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் அவருடன் வந்தவர்கள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் பேசுவதற்குகூட உரிமையில்லை. நான் எதுவும் தவறான பிரசாரம் செய்யவில்லை.

நதிகள் இணைப்பு விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன்.

நாங்கள் பிரசாரம் செய்து வந்த பழனி, வந்தவாசி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எங்களை தாக்கினர். இது ஜனநாயக நாடா? இல்லை சர்வாதிகார நாடா? என்று தெரியவில்லை.

எங்களை தாக்க முயற்சித்து எங்கள் வேனின் கண்ணாடியை உடைத்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். #Tamilnews

Tags:    

Similar News