செய்திகள்
செல்வசேகரின் குடும்பத்தினரை கவர்னர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சி.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகரின் குடும்பத்தினரை சந்தித்து கவர்னர் ஆறுதல்

Published On 2018-05-29 13:31 IST   |   Update On 2018-05-29 13:31:00 IST
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகரின் தாய் சகோதரிகளை சந்தித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலரும் காயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதல்லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வன்முறை சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அவர் வழங்கினார்.

இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (29-ந்தேதி) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர் விமான நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான‌ சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த செல்வசேகர் (40) வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வ சேகரின் தாய் மாசானம் அம்மாள் மற்றும் செல்வசேகரின் சகோதரிகள் 2 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது மாசானம் அம்மாள் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை கேட்டு கொண்ட கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன்பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். கவர்னர் வருகையை யொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். 
Tags:    

Similar News