செய்திகள்

நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு - உவரி வழியாக திருச்செந்தூர் செல்லும் பஸ்கள் நிறுத்தம்

Published On 2018-05-24 05:46 GMT   |   Update On 2018-05-24 05:46 GMT
நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி உடைக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்து குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வலுத்துள்ளது. இதன் காரணமாக குமரி கடலோர கிராமங்களில் போலீசார் ரோந்து சுற்றி வந்து விடிய, விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனைச் சாவடிகளிலும் இரவு-பகலாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

போலீசாரின் கண்காணிப்பையும் மீறி நேற்று இரவு நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் கல்வீசி உடைக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. கரியமாணிக்கபுரத்தை கடந்து ஆனைப்பாலம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது மர்ம நபர்கள் பஸ் மீது கற்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. இதுபற்றி பஸ் டிரைவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்றுப்பஸ்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோல நள்ளிரவு கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கரியமாணிக்கபுரம் பகுதியில் கல்வீசி தாக்கப்பட்டது. அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளும் சேதம் அடைந்தன.

இந்த சம்பவங்கள் குறித்தும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வீச்சில் ஈடுபட்டது ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஸ்கள் மீது கல்வீசப்பட்டதன் எதிரொலியாக கிராமப் புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

மேலும் நாகர்கோவிலில் இருந்து அஞ்சுகிராமம், உவரி வழியாக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.
Tags:    

Similar News