செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்

Published On 2018-05-23 15:15 IST   |   Update On 2018-05-23 15:15:00 IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்துக்கு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. #SterliteProtest #BanSterlite

மதுரை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

சேலம் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதில் ஈடுபட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

சாலை மறியல் போராட்டத்தை கைவிடக்கோரி போலீசார் வற்புறுத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் 2 பெண்கள் உள்பட 30 பேரை கைது செய்னர்.

மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.


இதில் சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நேற்று மாலை புதிய பஸ் நிலையம் எதிரே அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.மு.க., ஆதி தமிழர் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

விழுப்புரத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும், ‘ஸ்டெர்லைட்’ ஆலையை உடனே மூடக்கோரியும், தூத்துக்குடி மாவட்டத்தில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரியும், எடப்பாடி பழனிச்சாமி அரசை பதவி விலகக்கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்தனர்.

ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திராகாந்தி சிலை அருகே மாணவர் கூட்டமைப்பு சார்பிலும், காமராஜர் சிலை அருகில் மனித உரிமைகள் இயக்கம் சார்பிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜா தியேட்டர் சந்திப்பிலும் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 172 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், போலீசையும் கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

நாகர்கோவில் வேப்பமூட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. #SterliteProtest #BanSterlite

Tags:    

Similar News