செய்திகள்

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2018-05-18 03:44 GMT   |   Update On 2018-05-18 03:44 GMT
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.#ramadoss
சென்னை:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாத 77.5 சதவீத மக்களும், மாநில அளவில் தலித் அல்லாத 81 சதவீத மக்களும் பழி வாங்கப்படுகின்றனர். இந்த உண்மை மத்திய ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், சில சக்திகள் நடத்திய போராட்டத்திற்கு பணிந்து சட்டத்தை திருத்த முயல்வதும், அதை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கத் துடிப்பதும் திருத்த முடியாத தவறுகளாக மாறி விடும்.

எந்த ஒரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது; அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் அதை தடுக்கும் கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. அந்தக்கடமையைத் தான் உச்சநீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. அதற்கு மத்திய அரசு துணை நின்றிருக்க வேண்டும்; மாறாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தக் கூடாது. பா.ம.க.வை பொறுத்தவரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை ஒரு காலத்திலும் எதிர்த்ததில்லை.

கைவிட வேண்டும்

மாறாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கு அத்தகைய சட்டம் தேவை என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. அதேநேரத்தில் எந்தவொரு சட்டமும் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது என்ற அடிப்படையில் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதை புரிந்து கொள்ளாத சில அரைகுறைகளும், அவர்களை ஆதரிக்கும் சில சக்திகளும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தையே பா.ம.க. எதிர்ப்பதாக அவதூறு பரப்புகின்றன. அந்த அரைகுறைகளுக்கும், அவற்றை ஆதரிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் சரியான நேரத்தில், சரியான பாடம் புகட்டப்போவது உறுதி.

எனவே, வன்கொடுமை சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகு தான் யாரையும் கைது செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தை சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #ramadoss
Tags:    

Similar News