செய்திகள்

40 கோடி மோசடி- கைதான தொழில் அதிபர் புழல் சிறையில் அடைப்பு

Published On 2018-05-17 13:24 IST   |   Update On 2018-05-17 13:24:00 IST
40 கோடி மோசடி செய்தது தொடர்பாக கைதான தொழில் அதிபரை விசாரணைக்கு பிறகு போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை:

சென்னை அண்ணா சாலை ஸ்டேட் பேங்க் தெருவை சேர்ந்தவர் ஷிவ் ரத்தன் கன்னா (வயது 56). தொழில் அதிபரான இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து ஏற்கனவே ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

அதில் தனது நெருங்கிய உறவினரான மைலாப்பூர் தொழில் அதிபர் சுமித் மல்கோத்ரா (வயது 47)வும் நானும் பங்குதாரர்களாக சேர்ந்து, அலங்கார மின் விளக்குகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தோம்.

கடையை பெரும்பாலும் சுமித் மல்கோத்ராதான் கவனித்து வந்தார். எனக்கு ‘லைட்டிங்’ தொழில் தெரியாது என்பதால் என்னை நம்ப வைத்து கடை வருமானத்தில் ரூ.40 கோடியை சுருட்டி அம்பத்தூரில் தனக்கென தனியாக ஒரு கடையை தொடங்கி விட்டார்.

இந்த மோசடியை கண்டு பிடித்த நான், அவரிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றியது மட்டுமின்றி பணம் தராமல் மோசடி செய்கிறார்.

எனவே சுமித் மல்கோத்ரா மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பூஜா மல்கோத்ரா, ரேவதிராமன் மல்கோத்ரா, உமேஷ் மல்கோத்ரா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை கமி‌ஷனர் மல்லிகா, உதவி கமி‌ஷனர் சச்சிதானந்தம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தினார்.

பணம் மோசடி, கையாடல் நடந்தது தெரிய வந்துள்ளதால் இந்திய தண்டனை சட்டம் 406, 420, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொழில் அதிபர் சுமித் மல்கோத்ராவை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

சுமித் மல்கோத்ரா ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார். அந்த மனுவும் தள்ளுபடி ஆகிவிட்டது.

பூஜா மல்கோத்ரா, உமேஷ் மல்கோத்ரா, ரேவதிராமன் மல்கோத்ரா ஆகியோர் ஐகோர்ட்டில் முன்ஜாமீனுக்கு முயற்சி செய்து வருகின்றனர்.#tamilnews
Tags:    

Similar News